Sunday, November 23, 2008

471. ஜாதீயத்தில்/அரசியலில் ஊறிய சட்டக்கல்லூரி

சமீபத்தில் அம்பேத்கார் சட்டக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வன்முறை குறித்து இங்கே நிறைய பேசியாகி விட்டது. சற்றே தாமதமாய் தான் இதை எழுத முடிந்தது.

1. இந்த வன்முறைக்கு அரசியல்வாதிகளும் வழக்குரைஞர்களும் தான் மிக அதிக பொறுப்பேற்க வேண்டும், காவல் துறையை விட. சட்டக்கல்லூரி வளாகத்தை அரசியல் மைதானம் ஆக்கியது இவர்கள் தான். பெரும்பான்மையான வழக்குரைஞர்கள் ஏதாவது அரசியல் கட்சியை சார்ந்தே செயல்படுவதால், இம்மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே அரசியலின் (உருப்படாத) பால பாடங்களை கற்றுத் தேற கல்லூரி நாட்களை பயன்படுத்துகிறார்கள்.

2. முன்னர் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை/கல்லூரி நடவடிக்கை எனும் நிலை வரும்போது அதில் தலையிட்டு சமரசம் என்ற பெயரில் அம்மாணவர்கள் தண்டனையிலிருந்து தப்ப இவர்கள் உதவி செய்ததால், 'கொலையும் செய்வான் மாணவன்' என்ற நிலைக்கு அம்மாணவர்கள் செல்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை :( அப்படியிருந்தும், சட்டக்கல்லூரி மாணவர் மீது இந்த வருடம் மட்டும் 14 கேசுகள் பதியப்பட்டது !

3. மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய வழக்குரைஞர்கள் செய்யும் அராஜகத்தைப் பற்றி பேசாமல் இருப்பதே நலம் !

4. எது எப்படியோ, கடமை, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகிய விசயங்களை கடைபிடிக்க வேண்டிய குறைந்தபட்ச அவசியத்தை (தங்கள் காவலர் பயிற்சியில்) அறிவுறுத்தப்பட்ட காவல்துரையினரே ஒரு தீவிரமான குற்றம் தங்கள் முன்னால் நடந்தபோது வாளாவிருந்தது தான், பலருக்கும் கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. எனக்கென்னவோ, சட்டசபைக் கூட்டம் நடைபெறும் சமயம், தாங்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்கப் போக, அது backfire ஆகக்கூடிய அபாயம் இருந்ததாக போலீஸ் எண்ணியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

5. விடுதியில் இருப்பவர்களில் பெரும்பாலானவர் தலித் மாணவர்கள். விடுதியில் அவர்கள் வைத்தது தான் சட்டம் என்ற நிலை நிலவுவதாக ஒரு புகார் இருப்பினும், தங்கள் கிராமங்களில் அம்மாணவர்களும், அவர்கள் குடும்பங்களும் ஒடுக்கப்பட்ட சூழலில் அனுபவித்த அவமானங்களும் இன்னல்களும் அவர்களை கடினப்படுத்தியிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இது உளவியல் சார்ந்ததொரு பிரச்சினை.

பெரு நகரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் கூட, அவர்கள் 'தொடத்தகாதவர்களாக' அவமானத்துக்கு உள்ளாகும்போது, (தேவர் ஜெயந்தி விழா அழைப்பிதழில் அம்பேத்கார் பெயரை விட்டது மட்டுமே காரணமாக இருக்கத் தேவையில்லை, அது ஒரு Trigger, அவ்வளவு தான்!!) அவர்களின் ஆற்றாமையும் கோபமும் collective aggression-க்கு வழிவகுத்து, வன்முறையில் முடிகிறது. அதனால், வன்முறை சரி என்று வாதிடவில்லை! ஆனால், அடிபட்டு மயங்கிச் சாய்ந்த ஒருவனை சிலர் தொடர்ந்து அடித்து உதைத்தார்கள் என்றால், எத்தகைய ஒரு கோபம் உள்ளே ஒரு எரிமலையாக கனன்று கொண்டிருந்திருக்க வேண்டும் என்பதை நினைத்தால் மிக்க அதிர்ச்சியாக இருக்கிறது :( அதோடு, தலித் மாணவர்களை சாதி வெறியர்கள் என்பது நகைமுரண் தவிர வேறில்லை. ஒடுக்கப்பட்டு சமூகக் கட்டமைப்பில் கடைநிலையில் உள்ளவர்களுக்கு எப்படி சாதி சார்ந்த திமிரோ கர்வமோ வெறியோ இருக்க முடியும் ?!?!?!?

பொறுப்பில இருப்பவர்களும் (அரசியல்வாதிகள்) பொறுப்பாக இருக்க வேண்டியவர்களும் (வழக்குரைஞர்கள்) பிரச்சினையை சரியான முறையில் அணுகி, மாணவர்களிடையே சமரசமும், நட்பும், கல்லூரியில் நல்ல சூழலும் நிலவ வழி செய்யாமல் சுயலாபத்துக்காக பிரிவினைக்கு தூபம் போடுவது யாருக்குமே நல்லதல்ல.

6। நல்லவேளை, அடிபட்ட மாணவர் யாரும் உயிரிழக்கவில்லை, பிரச்சினையும் பூதாகாரமாக உருவெடுக்கவில்லை! இது போன்றதொரு சாதீய வன்முறை ஒரு கல்லூரி வளாகத்தில் நிகழ்வது இதுவே கடைசியாக இருக்கட்டும்। தங்கள் ஆற்றலையும், நேரத்தையும் படிப்பில் செலவிட்டு தங்களை வாழ்வில் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ள மாணவர்கள் தேவையில்லாத அரசியல் தலையீட்டால் உருப்படாமல் போவது மிக்க வருத்தத்திற்கு உரியது। கல்வி ஒன்றே சமூகத்தில் தாங்கள் நல்ல நிலையை அடைய (சமத்துவத்தை பெற) வழி வகுக்கும் என்பதை மற்றவரை விட தலித் மாணவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டியது மிக அவசியம்.

7. இறுதியாக ஒரு விசயம். எந்த ஒரு பிரச்சினை என்றாலும், அரசுப் பேருந்துகளை உடைத்தும் நாசமாக்கியும் எதிர்ப்பை தெரிவிக்கும் பழக்கத்திற்கு சாவுமணி அடிக்க வேண்டும். மக்கள் வரிப்பணத்திலிருந்து அவை வாங்க்கப்பட்டவை என்பது கூட சிலபல மாணவ மரமண்டைகளுக்கே புரியவில்லை என்றால், பாமரர்களான கட்சித் தொண்டர்களுக்கு எப்படி புரியும் ?!?!? பொதுச்சொத்துக்கு நாசம் விளைவிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க்ப்படும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். அது பொடா அளவுக்கு இருந்தால் கூட பரவாயில்லை !!!!

எ.அ.பாலா

4 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

As always, my comment will be the first comment to TEST :-)

said...

சரியான கருத்துக்கள்....

இலவசக்கொத்தனார் said...

உண்மையில் கல்லூரியில் அரசியல், சாதி சங்கம் என்று இவர்களை ஏத்தி விட்டவங்கதான் முதல் காரணம்.

அப்புறம் இங்க நடந்ததுக்கு கோவையில் கல்லூரி ஜன்னல்களை உடைத்த பிரகஸ்பதிகளைப் பத்தி ஒண்ணும் சொல்லவே இல்லையே.

said...

சாதீயம் என்று சொல்லக்கூடாது பார்ப்பனீயம் என்று தான் சொல்ல வேண்டும், புரிஞ்சுதா? இல்லாட்டி எப்படி பார்ப்பனர்களை பிரச்சினைக்குள் இழுத்து சாத்த முடியும்?

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails